ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நால்வர் நியமனம்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள், ஜனாதிபதியின் சட்டத்தரணிகளாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிகளுக்கு பதவி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நியமனம்
இதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான ஹிரஞ்ஜன் பீரிஸ், ஆஸார்ட் நவவி, லக்மாலி கருணாநாயக்க, சுதர்ஷன டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி என்பது ஒரு உயர் தொழில்முறை அந்தஸ்தாகும்.
ஜனாதிபதியால் வழங்கப்படும் பதவி
அரசியலமைப்பின் 33(cc) ஆவது பிரிவின் கீழ், சட்டத்துறையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ள மற்றும் உயர் நடத்தை, தொழில்முறை நேர்மைத் தரங்களைப் பேணிவரும் சட்டத்தரணிகளுக்கு இந்த கௌரவப் பதவி ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், உத்தியோகபூர்வமாக நடைபெறும் ஒரு விசேட நீதிமன்ற அமர்வில் பிரதம நீதியரசர் முன்னிலையில் தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்வார்கள் எனவும், இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



