வெளிநாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கியுடன் முன்னாள் கடற்படை வீரர் கைது
வெளிநாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கியுடன் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை, மீட்டியாகொட, கலகொட வீதியில் குறித்த கடற்படை சிப்பாய் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவரைக் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதத்துடன் காத்திருந்த நிலையில், அம்பலாங்கொடை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இதன்போது, சந்தேகநபர் தனது இடைப்பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீட்டர் (9MM) ரக கைத்துப்பாக்கி (Pistol) ஒன்றை மறைத்து வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் அம்பலாங்கொடை, குளிகொட ரொன்னதூவ பகுதியில் உள்ள அவரது வாடகை வீட்டில் இருந்து குறித்த 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கிக்குப் பயன்படுத்தக்கூடிய 2 தோட்டாக்கள் , ஒரு மெகசின் மற்றும் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்கு இந்தத் துப்பாக்கியை தற்போது இராணுவத்தில் சேவையாற்றி வரும் இராணுவ வீரர் ஒருவரே வழங்கியுள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து, அந்த இராணுவ வீரரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்துவதற்காகக் பொலிஸார் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரின் இடுப்பில் இருந்த 9 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கியைச் சோதித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இது சாதாரண கைத்துப்பாக்கிகளை விடவும் அதிநவீன மற்றும் முழுமையான தானியங்கி (Fully Automatic) வசதிகொண்ட, ஆஸ்திரியா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு நவீன ஆயுதம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.