கொழும்பில் பயண பையை தொலைத்த வெளிநாட்டவரின் நிலை
இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான பயண பொதி மீண்டும் அவரிடம் ஒப்படைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயிலில் பயணித்த பிரேசில் நாட்டு பிரஜை ஒருவரின் லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, ஆயிரம் டொலர்கள் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்கள் ரயிலில் மறந்துவிட்டு சென்றுள்ளார்.
அவ்வாறு மறந்துவிட்டு சென்ற பொருட்களை சில நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து விரைவு ரயில் பிற்பகல் 2.20 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடைந்தது.

பிரேசில் நாட்டவரான அன்டோனியோ, தனது பையை மறந்து கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கியுள்ளார். பின்னர் இது பற்றி கோட்டை ரயில் செயற்பாட்டு அலுவலகத்திற்கு வந்து தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ரயில் ஏற்கனவே மருதானை நிலையத்திற்கு சென்றுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் அளித்து, மருதானை நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறும் அதில் உள்ள பையை பெற்றுத் தருமாறும் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த அறிவிப்பிற்கமைய, மருதானை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பரிசோதித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தமயந்தி, ஒரு பெட்டியில் வெளிநாட்டவரின் பயணப் பையை கண்டெடுத்துள்ளார்.
கோட்டை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டவருடன் வாகனத்தில் மருதானை ரயில் நிலையத்திற்குச் சென்று பயணப்பொதிகளை கைப்பற்றி மீண்டும் கோட்டை ரயில் பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்து பிரேசில் நாட்டவரான அன்டோனியோவிடம் ஒப்படைத்தனர்.
ரயிலில் மறந்து விட்டு வந்த போதிலும் இவ்வளவு பாதுகாப்பாக இருந்தமை மற்றும் அதனை பெற்றுக் கொடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        