முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் இல்லத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்(Photos)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூங்கிலாறு கிராமத்தில் உடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன், கிராமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு - உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த கோரியும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
இதன்போது காலையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் முதன்மை வீதியில் செல்லும் போது தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது பொலிஸாரின் பிரசன்னத்துடன் அமைச்சரின் வாகனம் மேற்கொண்டு பயணிக்கப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்ட காரர்களுக்குப் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
பிரதேச செயலாளர் மக்களிடம் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் நன்றாக விளங்கியுள்ளார். அதுதான் உடனடியாக இங்க வந்துள்ளார். பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சட்டத்திற்கான சட்ட நடவடிக்கையினை உரியமுறையில் செய்து கொடுப்பதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் அமைச்சரிடம் தெரிவிக்கையில்,
இந்த கிராமம் குடியேற்றப்பட்ட கிராமம் வறுமைப்பட்ட மக்கள்தான் வாழ்ந்து வருகின்றார்கள். பெண்தலைமைத்துவகுடும்பங்களும் வேலைவாய்ப்பில்லாத போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும்தான் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.
இங்கு நிரந்தர தொழில் இல்லாத நிலையில் அதனால் இவர்கள் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுவும் இவ்வாறான சம்பவங்களுக்கு ஒரு காரணம் இவர்களுக்கு நிரந்தர தொழிலுக்கான ஏற்பாடு செய்தால் கிராமம் முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த கிராமத்தில் இனிமேல் இவ்வாறான சம்பவம் ஒன்று நடக்காமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிராமத்தில் கிராம சேவையாளர் என்றும் மக்களுடன் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்த மக்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குச் சட்டத்தில் தண்டனையினை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆறு மாத காலத்திற்குள் வெளியில் வந்துவிடுகின்றார்கள் என தெரிவித்தனர்.
பெண்களுக்கான வாழ்வாதார உதவியினை மேற்கொள்வதுடன் மாணவர்களின் கற்றல்
செயற்பாட்டிற்கும் அமைச்சு ஊடாக உதவமுடியும் பெண்களை வீடுகளிலிருந்து
வேலை செய்யக்கூடிய வகையில் பிரதேச செயலாளர் ஊடாக கதைத்து முடிவு எடுக்கப்படுமாக
இருந்தால் அதற்கு முதற் கட்டமான நடவடிக்கை அமைச்சின் கீழ் எடுக்கப்படும்
என்றும் இராஜாயங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

