வழங்கப்படும் உணவை சாப்பிட முடியவில்லை:கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாக நோயாளிகள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பன காரணமாக பல வாரங்களுக்கு முன்னதாகவே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் இறைச்சி மற்றும் மீன் என்பன நீக்கப்பட்டுள்ளன.
பல வாரங்களாக உணவில் மீன் சேர்க்கப்படுவதில்லை
பல வாரங்களாக உணவில் மீன் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே பால் மா தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக மாதக்கணக்கில் நோயாளிகளுக்கு பால் தேனீர் வழங்கப்படுவதில்லை.
தற்போது ஒரு வேளை தேனீர் மாத்திரம் வழங்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாது சலிப்பை ஏற்படுத்துவதாகவும் அவை சேறும்,தண்ணீரும் போல் இருப்பதாகவும் பலர் வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவை சாப்பிட விரும்புவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளர்களுக்கு நேற்று முன்தினம் அம்பரலங்காய் மற்றும் வெள்ளரிக்காய் கறியுடனேயே சோறு வழங்கப்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.