அரச வைத்தியசாலையில் தீர்ந்துள்ள மருந்துகளின் கையிருப்பு! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு முழுமையாக தீர்ந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள சில அரச வைத்தியசாலைகளில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகள் மட்டுமே உள்ளது. ஏனையவற்றின் கையிருப்பு வேகமாக தீர்ந்துள்ளது.
மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு
இந்நிலையில், அரசு வைத்தியசாலைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தம்மிடம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.அவ்வாறு மருந்துகள் இருக்குமாயின் விநியோக பிரச்சினையே காணப்படுகின்றது.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து தொகுதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும்.
மாற்று மருந்துகளை வழங்க முடியாத நிலையில் ஊழியர்கள்
எனவே தேவையாக மருந்துகளை அனுப்ப கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை, தேசிய கண் வைத்தியசாலையில் ஒரேயொரு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மட்டுமே உள்ளது.வேறு மாற்று மருந்துகளை வழங்க முடியாத நிலையில் ஊழியர்கள் இருப்பதாகவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது, அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றது. கையிருப்பு குறைவாக உள்ள அல்லது வேகமாக தீர்ந்துகொண்டிருக்கும் மருந்துகளின் பட்டியல் தங்களிடம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.