இலங்கை மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் மழையுடன் தெதுரு ஓயா படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை, ஒரு பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தெதுரு ஓயா படுகையில் அமைந்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரசநாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும் வெள்ள நிலைமை
மேலும், கும்பக்கன ஓயா படுக்கையில் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால், மொனராகலை மற்றும் புத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களில் நிலவும் வெள்ள நிலைமை, பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நக்கல, கும்பக்கன, மாதுருகெட்டிய, ஒக்கம்பிட்டிய மற்றும் காமினிபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு இந்த அபாயம் உள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நில்வளா கங்கை படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி கங்கை படுக்கையில் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால் ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும். பதுளு ஓயா படுகையின் பதுளை மற்றும் சொரணத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பதுளு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது.
இதேவேளை, யட்டிநுவர மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், கண்டி - கன்னோருவ வீதியிலும் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அத்துடன், மகா ஓயா படுகையிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால் அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கலா ஓயா படுகையில் அமைந்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவுக்கு உள்ளான கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு அப்பகுதியில் பெய்த பலத்த மழையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனக்க ஹந்துன்பத்திராஜ தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |