அவதானம்! அத்தனகலு ஓயா - உருவல் ஓயா கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் பாஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, அவற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
திடீர் வெள்ளம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்மானி நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நீர் மட்டத்தின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீர் மட்டம் அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாகன ஓட்டுநர்கள்: வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பதால், பாதைகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் அரச அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்து, அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.