இயற்கையின் கோரத் தாண்டவம்! இதுவரையில் 12 உயிர்கள் பலி
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மற்றும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மிகப்பலத்த மழை பதிவாகி கடுமையான சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்தச் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமையுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார் என்றும், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கனமழை
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
மாதம்பை - மெல்லவாகார வீதியிலுள்ள களு அத்துர வான்கதவின் வெள்ளப்பெருக்கில் சிக்கி நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2 ஆயிரத்து 826 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 311 பேர் இதுவரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் மழை காரணமாகக் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து இரத்தினபுரி மற்றும் நாவலப்பிட்டியின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரியில் களு கங்கையின் நீர்மட்டம் 7 அடியைத் தாண்டியதால் தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
அவசர அனர்த்த சூழ்நிலைகள்
அத்துடன் களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால் கம்பஹாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி - பாணந்துறை ஏ 8 பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடைப்பட்டு, பின்னர் பொலிஸாரினாலும் பிரதேச மக்களினாலும் சீர்செய்யப்பட்டது.
மழைநீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 14 பிரதான நீர்தேக்கங்கள் வான் பாய்ந்து வருகின்றன.

குகுலே கங்கை, பொல்கொல்ல, விமலசுரேந்திர, லக்ஷபான, மேல் கொத்மலை, தெதுரு ஓயா, இராஜாங்கனை மற்றும் கலா வாவி உள்ளிட்ட முக்கிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
விக்டோரியா மற்றும் காசல்ரீ நீர்தேக்கங்களும் தமது அதிகபட்சக் கொள்ளளவை எட்டியுள்ளதால், ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் '117' என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam