மரண தண்டனை இரத்து! அனோஜன் சிவராசாவைச் சந்தித்த இலங்கைத் தூதுவர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், ஒக்டோபர் 26ஆம் திகதி தம்மாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மரண தண்டனை
இதன்போது, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான சட்ட மற்றும் தூதரக உதவிகள் குறித்து அனோஜன் சிவராசாவுடன் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவாக அறிந்திருப்பதையும், வழக்குடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமையக் கையாளப்படுவதையும் உறுதிப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதில் இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் ஈடுபடும் எனத் தூதுவர் அமீர் அஜ்வத் உறுதியளித்துள்ளார்.
அனோஜன் சிவராசா
மேலும், சவூதி அரேபிய நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்த தூதுவர், அனோஜன் சிவராசா தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரது நலனைக் கவனித்துக்கொள்வதற்கும், இலங்கைத் தூதரகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதலாம் செயலாளர் (தூதரக விவகாரங்கள்) விந்தன முனசிங்க மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாஹுல் ஹமீத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri