தெதுரு ஓயாவின் நீர்மட்டம் பாரியளவில் அதிகரிப்பு: பல்வேறு பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர் மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களுக்கும், ஆற்றை அண்டிய வேறு சில பிரதேசங்களுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தெதுரு ஓயாவை அண்மித்த தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதுதொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசாங்க அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குறித்த பிரதேச நெடுஞ்சாலைகள் மற்றும் கிளைப்பாதைகள் வழியாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே மேற்குறித்த பிரதேசங்களில் ஏற்படக் கூடிய வெள்ள அனர்த்தம் தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளிடம் நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.