யாழ். நெடுந்தீவு படுகொலையுடன் தொடர்புடைய கொலையாளி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் வீடொன்றில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த கொலை இடம்பெற்ற வீட்டிலிருந்து நகைகள்,பணம் எவையும் கொள்ளையடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆண் ஒருவர் தங்கும் அறையிலும், மற்றுமொருவர் வேறொரு அறையிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு பெண் படுக்கை அறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மற்றைய இரண்டு பெண்களும் வீட்டிற்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினர்கள் எனவும் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.