வடமராட்சி கிழக்கில் மிக மோசமாக சுருக்குவலை தொழில்! முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
வடமராட்சி கிழக்கில் கட்சி சார்ந்தவர்கள் ஆறு சுருக்குவலை தொழில்களை வைத்திருப்பதாகவும், அவர்களை கடற்படை கைது செய்யும் போதும் உடனடியாக குறித்த கட்சியின் பொறுப்பாளர் கடற்படையுடன் தொடர்பு கொண்டு அவர்களை விடுவிப்பதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் இன்று (15.05.2023) பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கில் இன்று மிக மோசமாக சுருக்குவலை தொழில் இடம்பெற்று வருகிறது.
அழிக்கப்படும் கடல் வளங்கள்
எப்போதாவது இருந்து விட்டு ஒரு சில படகுகளை கடற்படை பிடிக்கும் போதும், அதற்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இன்று கடலில் எவ்வளவோ அநியாயங்கள் அட்டூழியங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. அதேபோன்று கடல் வளங்களும் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஆனால் கடற்தொழில் அமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றார். இன்று ஓரிரு வருடங்களில் மக்கள் பழைய நிலைக்கு வந்து தொழில்களில் ஈடுபட முடியும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
ஆனால் இன்று பாரம்பரிய தொழில்களை கைவிட்டு மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.