தலைமன்னார் கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி (06.08.2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது இன்று வியாழக்கிழமை (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை மீன் பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் நேற்று (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர் இன்று (23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்றையதினம் (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.



