ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டாய நடைமுறை..! ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்து வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட்ட வைத்திய துறையை சேர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை சமல் விஜேசிங்க கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023 மற்றும் 2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பரிந்துரைகள்
சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல், புத்திஜீவிகளின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஊடாக புதிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்த திட்டங்களை வகுக்கும் போது, ஸ்கெண்டினேவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றகரமான சுகாதார கட்டமைப்பு தொடர்பில் ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
