மன்னார் மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியானது..!
2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சுகாதாரத் துறைக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில், மன்னார் மாவட்டத்துக்கு மாத்திரம் 21.7 சதவீதமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, மன்னார் மாவட்டத்துக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்துக்கான சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடுகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் சில தரப்பினரால் உள்நோக்கத்துடன் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு உண்மையான தரவுகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தத் தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றன வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு மொத்தமாக 3,096.68 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்னார் மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு
இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்குமான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் மற்றும் அவற்றின் சதவீதங்கள் பின்வருமாறு,
யாழ்ப்பாணம்: 984.54 மில்லியன் ரூபா (சுமார் 31.8மூ)

மன்னார்: 672.04 மில்லியன் ரூபா (சுமார் 21.7மூ)
முல்லைத்தீவு: 531.13 மில்லியன் ரூபா (சுமார் 17.2மூ)
வவுனியா: 461.70 மில்லியன் ரூபா (சுமார் 14.9மூ)
கிளிநொச்சி: 307.53 மில்லியன் ரூபா (சுமார் 9.9மூ)
மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்: 139.75 மில்லியன் ரூபா (சுமார் 4.5மூ)
மன்னார் மாவட்டத்துக்கான திட்டவாரியான நிதி ஒதுக்கீடு: மன்னார் மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியான 672.04 மில்லியன் ரூபா
குறித்த மாவட்டத்தின் பல்வேறு செயற்றிட்டங்களின் கீழ் பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்திய நிதியுதவி: 230.00 மில்லியன் ரூபா (மன்னார் மாவட்டப் பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள் மற்றும் உபகரணங்களுக்காக இந்தியாவின் ஒட்டுமொத்த நிதியுதவியான 600 மில்லியன் ரூபாவில், இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதுவாகும். எஞ்சியவை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கானவை).
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (பி.எஸ்.டி.ஜி): 205.32 மில்லியன் ரூபா
உலக வங்கியின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு
முறைமை மேம்பாட்டுத் திட்டம் (பி.எச்.எஸ்.ஈ.பி): 85 மில்லியன் ரூபா
பராமரிப்புப் பணிகள்: 74.29 மில்லியன் ரூபா
ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏ.டி.பி): 36.73 மில்லியன் ரூபா
டித்வா (விசேட செயற்றிட்டம்): 34.00 மில்லியன் ரூபா
திறன் மேம்பாட்டு நன்கொடை (சி.பி.ஜி): 6.70 மில்லியன் ரூபா