பழுதடைந்த உணவுகள் - யாழில் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிரபல அசைவ உணவகம் (Photos)
யாழ். நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தினை இன்றைய தினம் (23.05.2023) வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
இந்த உணவகம் சில தினங்களுக்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்று உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20 கிலோகிராம் உணவு பொருட்களும், பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இன்றைய தினமே உணவக உரிமையாளருக்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது.
வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் ஜுன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
You may like this Video