சூடுப்பிடிக்கும் உலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி! பிரான்ஸ் அணி வீரர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் பிரான்ஸ் அணியும் முன்னாள் சம்பியன் அணியான ஆர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன.
இந்நிலையில், பிரான்ஸின் சில வீரர்களுக்கு மர்ம வைரஸ் பாதிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அணி வீரர்கள்
நேற்றுமுன்தினம் நடைபெற்ற பிரெஞ்சு குழாம் பயிற்சியில் ரபாயெல் வரேன், இப்ராஹிமா கொனாட்டே, கிங்ஸ்லி கோமன் ஆகிய மூவரும் பங்குபற்றவில்லை.
இவ்வீரர்களுக்கு தடிமன் போன்ற அறிகுறிகள் தென்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மொரோக்கோவுடனான அரை இறுதி அட்ரியென் ரபியொட், டெயோட் உபாமெகானோ ஆகியோர் விலகியிருந்தனர். எனினும் இவ்விருவரும் பின்னர் பயிற்சிகளுக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜென்டீன அணித்தலைவர் மெஸியும் நேற்றுமுன்தினம் பயிற்சியில் பங்குபற்றவில்லை.
அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என செய்தி வெளியாகியிருந்தது.
இறுதிப் போட்டி
எனினும், மெஸிக்கு பாதிப்பு இல்லை எனவும் அவர் இறுதிப் போட்டியில் விளையாடுவார் எனவும் ஆர்ஜென்டீன ஊடகமான கிளேரின் தெரிவித்துள்ளது.
கத்தாரின் தலைநகர் தோஹாவிலிருந்து 23 கிலோமீற்றர் தூரத்திலுள்ள, அந்நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நகரான லூசெய்லின், லூசெய்ல் அரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
பீபாவினால் 22 தடவையாக நடத்தப்படும் உலகக் கிண்ண சுற்றுப்போட்டி இது. இந்நிலையில், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் 3 தடவையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முயற்சிக்கின்றன.
ஆர்ஜென்டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உலக சம்பியனாகியது. 1930, 1990, 2014 ஆம் ஆண்டுகளின் இறுதிப்போட்டிகளில் ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது.
பிரான்ஸ் 1998, 2018 ஆம் ஆண்டுகளில் உலக சம்பியனாகியது. 2006 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் தோல்வியுற்றிருந்தது. இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 42 மில்லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்பரிசு வழங்கப்படும்.
2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர் ஆர்ஜென்டீனாவும் பிரான்ஸ்ம் 1930 முதல் இதுவரை 12 தடவைகேள சர்வதேச போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. இவற்றில் ஆர்ஜென்டீனா 6 தடவைகளும் பிரான்ஸ் 3 தடவைகளும் வென்றுள்ளன.
உலகக் கிண்ண வரலாற்றில் 3 தடவைகள் இவ்வணிகள் மோதியதில் 2 தடவைகள் ஆர்ஜென்டீனாவும் ஒரு தடவை பிரான்ஸ்ம் வென்றன.
எனினும், இவ்விரு அணிகளும் இறுதியாக 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் 2 ஆவது சுற்றில் மோதின. அப்போட்டியில் 4:3 கோல் விகிதத்தில் பிரான்ஸ் வென்றது.
1958, 1962 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் இதுவரை எந்த நடப்புச் சம்பியனும் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளவில்லை.
1990 இல் அப்போதைய நடப்புச் சம்பியன் ஆர்ஜென்டீனாவும் 1998 இல் நடப்புச் சம்பியன் பிரேஸிலும் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.