நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 26 வரையிலான நான்கு மாதங்களில் எலிக்காய்ச்சலினால் 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற காலி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டி ஆராச்சி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 224 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அக்காலப்பகுதியில் 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நோய் அறிகுறிகள்
பெரும்பாலும் வயலில் தினசரி வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக வைத்தியர் கூறியுள்ளார்.
மேலும், காலில் புண் அல்லது காயம் ஏற்பட்டால், நெல் வயல் தொடர்பான தொழில்களில் ஈடுபட வேண்டாம் எனவும், எலி சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்களால் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகுதல் அவசியம் ஏன்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.