வெளிநாட்டினர் வாக்களிப்பதைத் தடுக்கும் கூட்டாட்சிச் சட்டம்: அமெரிக்க நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
வெளிநாட்டுப் பிரஜைகள் வாக்களிப்பதைக் குற்றமாக்கும் அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என மியாமி கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி டேவிட் லீபோவிட்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளார்.
வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, வாக்காளர் மோசடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இத்தீர்ப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட புளோரிடா பெண் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
முக்கிய தீர்ப்பு
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வாக்காளர்களுக்கான தகுதிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மாநிலங்களுக்கே உரித்தானதே அன்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இல்லை என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலமும் ஏற்கனவே வாக்களிப்பதற்கு அமெரிக்கக் குடியுரிமையைக் கட்டாயமாக்கியுள்ளதால், குறித்த சட்ட மீறல்கள் தொடர்பாக நீதித் துறையை விடப் புளோரிடா மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பு குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்ற போதிலும், அமெரிக்கா முழுவதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நிலுவையில் உள்ள சுமார் 45 வழக்குகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.