காதலனை நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி
நுவரெலியா - கினிகத்தனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(19.01.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விசாரணை
பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தனை, கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
காதலனை சந்திக்க, காதலனின் நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், அங்கு காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி, இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதனைத் தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 16 முதல் 17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் நேற்று(19.01.2026)நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களை எதிர்வரும் 2026 பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.