மன்னாரில் ஜனாதிபதி கூறிய பொய்யான தகவல்: எழுந்துள்ள விமர்சனம்
மன்னாரில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று(18.04.2029) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தியை அரசாங்கம் அரச அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
காற்றாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம்
அது மாத்திரமல்லாது 16.01.2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக குறித்த திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குறித்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் திட்டத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நடைபெறவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. தாழ்வு பாட்டில் 10 காற்றாலைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |