இலங்கையிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படும் வெடிபொருட்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தகவல்
இலங்கையிலிருந்து காலாவதியான வெடிமருந்துகளை உக்ரைனுக்கு (Ukraine) அனுப்ப போலந்து (Poland) இடைத்தரகர்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளை ஏற்க முடியாதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் (Colonel Nalin Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டில் இராணுவத்திற்கு சொந்தமான கிடங்குகளில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
எனினும், இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானவை அல்ல, ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும்.
வெளியான செய்தி
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த வெடிமருந்துகளை உடனடியாக அகற்ற அல்லது அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இனியும் கிடங்குகளில் அவற்றைத் தக்கவைப்பது தேவையற்றது எனக் கருதி, இலங்கையிலிருந்து கையிருப்பை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், குறித்த காலாவதியான வெடிபொருட்கள் சீன (China) நிறுவனமொன்றுக்கு சொந்தமானவை என பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை தனியார் ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
ரஸ்ய ஊடகம்
மேலும் குறித்த செய்தியில், கடந்த ஆண்டு இலங்கை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த காலாவதியான வெடிமருந்துப் பொருட்களை போலந்துக்கு விற்க முயற்சிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச அழுத்தத்தால் விற்பனை முறியடிக்கப்பட்டதுடன் அந்த நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, குறித்த தனியார் நிறுவனம் போலந்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊடாக காலாவதியான வெடிப்பொருட்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக ரஸ்யாவின் (Russia) அரச ஊடகமான டெலிகிராம் வலையமைப்பில் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |