வனிதா சேனாதிராஜா மரணம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அண்மையில் மின்னேரியா பகுதியில் மரணமடைந்திருந்த வனிதா சேனாதிராஜாவின் இறப்பிற்கான நீதியான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஈழ தமிழர் உரிமைகள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அது தொடர்பான அறிக்கையின் முழு விபரம் வருமாறு, இத்தருணத்தில் வனிதா சேனாதிராஜாவின் குடும்பத்தாரதும், உறவினரதும் இதர நண்பர்கள் அனைவரதும் கரங்களையும் நாம் இறுகப்பற்றி எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வனிதா சேனாதிராஜா எந்தவித ஆயுதப் போராட்டப் பின்னணியும் அற்றவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டமோ வேறெந்த இலங்கைச் சட்டங்களாலோ நாமறிய அவர் குறிவைக்கப்பட்டிருக்கவில்லை.
உரிய நடவடிக்கை
அப்படியான எச்சரிக்கைச் செய்திகள் எதையும் அவர் எம்மோடு பரிமாறியிருக்கவுமில்லை. இருந்தபோதும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்படும் சூழல் காணப்படுவதால் இவரது இறப்புத் தொடர்பில் தக்க அதிகாரத் தரப்புகள் முறையாக விசாரணையை முன்னெடுக்கவேண்டும்.

மின்னேரியா பகுதியில் வதை முகாம்கள் கடந்த காலங்களில் இயங்கியிருந்தன என்பதும், குறிப்பாக இலங்கை இராணுவத் தரப்பு, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் வெள்ளை வாகன ஆட்கடத்தல்களோடு தொடர்புபட்ட மறைமுக தரப்புகள் அந்த முகாம்களை இயக்கியிருந்தன என்பதும் ஐ.நா. மனித உரிமை அறிக்கைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ள பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது வனிதா சேனாதிராஜாவின் உயிரிழப்பு பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இவரது மரணம் தொடர்பில் சான்றுப் பொருட்கள் மூலமான ஆய்வையும் மரணம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த கடிதம் தொடர்பான உண்மைத் தன்மையைக் கண்டறிவதில் பொலிஸபாரும், சட்டத்துறையும் தமது கடமையை நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டம் கவனம் செலுத்தத் தவறின், மேலும் வலுக்கும் சந்தேகங்களை அது எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.