விசாரணைகள் இருந்து தப்புவதற்காக விசமப் பிரச்சாரம்: முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் பேராசிரியர் விளக்கம்
புதிய இணைப்பு
முகநூல் நபர் ஒருவர் விசாரணைகள் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டி கொள்வதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வேல் நம்பி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் தொகுதி தொடர்பில் பேராசிரியர் வேல்நம்பியை தொடர்புபடுத்தி வெளிவந்த செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார்.
குறிந்த செய்தி தொடர்பில் முகநூல் நபருருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன். பொலிஸ் விசாரணைகளில் இருந்து தப்புவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் தேவையற்ற விடயங்களை என் மீது சுமத்துவதற்காக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.
செய்தி - கஜி
முதலாம் இணைப்பு
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும் (Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் அவதூறு பரப்பியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்ப்பட்டுள்ளது.
பேராசிரியர் ரங்கநாதன் கபிலன் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு முன்னிலைப்படுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அச்சமின்றி சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவு தொடர்பாகவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




