களனி கங்கையின் கிளையான காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியது : மக்களுக்கு எச்சரிக்கை!
களனி ஆற்றின் பிரதான கிளையான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர்தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.
நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 14 தானியங்கி வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதானம்..!!
இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர் தேக்கத்தின் கடமை நேர பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அதிகளவான நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கமும் நீர் நிரம்பி வெளியேறும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.