தமிழர் பகுதியில் ஆபத்தான பொருட்கள் மீட்பு.. தீவிர விசாரணையில் பொலிஸார்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
திருகோணமலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், கடந்த வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யுத்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இந்த ஆயுதப் பாகங்கள், கொம்பன்குளம் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள சிறிய இரும்புத் தகடு ஒன்றினால் மூடப்பட்ட குழிக்குள், பெரிய பீப்பாயொன்றில் உரப்பையினுள் இட்டுப் புதைக்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட பொருள்கள்
மீட்கப்பட்ட பொருள்கள், அனைத்தும் நீண்டகாலமாக நிலத்தின்கீழ் இருந்தமையால் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பொருள்களின் விவரங்கள் இருவேறு பிரிவுகளாகக் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருள்கள்
* ரி - 56 ரக தோட்டாக்கள் — 08
* பிஸ்ரல் தோட்டாப் பைகள் — 03
* பிஸ்ரல் உறை — 01
* பிஸ்டல் தோட்டாக்கூடு — 01
* கிளைமோர் கம்பி — 02 ரோல்கள் (தலா 15 மீற்றர் வீதம் மொத்தம் 30 மீற்றர்)
* கிளைமோர் மின்கலங்கள் — 04
* உரப்பை — 01 2. பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளவை.
* கிளைமோர் குண்டு — 01 (சுமார் 2.5 கிலோ எடை கொண்ட பழுப்பு நிறக் குண்டு)
* மிதிவெடிகள் — 02 மீட்கப்பட்ட ஆபத்தான கிளைமோர் குண்டு மற்றும் மிதிவெடிகள் என்பன குச்சவெளி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதனைச் செயலிழக்கச் செய்வதற்கான உரிய உத்தரவுகள் பெறப்படும் வரை, பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் குச்சவெளி பொலிஸாரும் இணைந்து, இந்த ஆயுதங்களை மறைத்து வைத்த நபர்கள் யார் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

