ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு
ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாராக இருக்கலாம் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
முழுமையான மற்றும் இறுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டிய The Wall Street Journal, ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைப் பெற முடியாவிட்டாலும் அதிலிருந்து விலகிச் செல்லலாம் என அவர் தனது மூத்த ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

இதில் பல பில்லியன் டொலர் நிதி வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல், பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவை அடங்குகின்றன.
இந்தக் கோரிக்கைகள் காரணமாக வாஷிங்டனின் இராஜதந்திரத் தெரிவுகள் குறைந்துள்ளதாகவும், விரைவான உடன்பாட்டை எட்டுவதற்குப் பதிலாக நீண்டகால மோதலுக்கு ஈரான் தயாராகி வருவதற்கான அறிகுறிகளாக இவை இருப்பதாகவும் The Wall Street Journal தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள்
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள குறுகிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் முக்கியமான அழுத்தக் கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் பாதித்துள்ளதாகவும், இதனால் கப்பல் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டு உலக சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கிய பின்னர் பெப்ரவரி மாதத்தில் ஈரான் இந்த நீர்வழிப் பாதையை மூடியதாகவும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என ஈரான் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலைகள்
எனினும், இந்தக் கட்டுப்பாடுகளையும் ஈரான் விதிக்க முயலும் கட்டண முறையையும் அமெரிக்கா நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி The Wall Street Journal தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சமீப காலங்களில் பலமுறை கூறியிருந்தாலும், அந்தக் கூற்றுகள் தொடர்ந்து முன்கூட்டியதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பெப்ரவரி இறுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இராணுவ நடவடிக்கை தனது இலக்குகளை அடைந்தது என்பதை அமெரிக்க வாக்காளர்களிடம் நிரூபிக்க வேண்டிய அரசியல் அழுத்தத்திலும் ட்ரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.