தாய்வானின் 2027ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் ட்ரில்லியனாக உயர்வு
தாய்வான் அரசாங்கம் தனது 2027ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனத்தை 16 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.
அதற்காக முதன்முறையாக 1 ட்ரில்லியன் தாய்வான் டொலர்களுக்கும் அதிகமாக ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டம்
தாய்வானை தனது சொந்தப் பிராந்தியம் என உரிமை கோரி வரும் சீனா, கடந்த சில வருடங்களாக இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வரும் நிலையிலேயே தாய்வான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அமைச்சரவையினால் முன்வைக்கப்படவுள்ள இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் கடலோரப் பாதுகாப்புப் படை, படைவீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான நிதிகள் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன் இந்த நிதியொதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தாய்வான் தனது வருடாந்த 'ஹான் குவாங்' இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இராணுவத்தை நவீனமயமாக்குவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக மாறியுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.