மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தில் வெடி விபத்து - 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
மட்டக்களப்பு - கிரான், கூளாக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (11.09.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி வெடிக்க முயன்ற சிறுவன்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆலயத்தின் உற்சவத்தின் போது பெரிய வெடியொன்றை சிறுவன் வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது வெடிக்கு தீ வைத்தும் அது வெடிக்காத நிலையில், குறித்த சிறுவன் வெடியை பார்ப்பதற்காக அருகில் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான், கூளாக்காட்டைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.