2027 வரவு செலவு திட்டத்தின் இலக்கு இதுவே! நிதித்துறை பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்கு மற்றும் அது கொண்டுவர முனையும் நீண்டகால மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிதித்துறை பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் அரசு சமர்ப்பிக்கவுள்ள மூன்றாவது வரவு - செலவுத் திட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்
வரவு - செலவுத் திட்டத்தை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள பிரதி அமைச்சர், அதன் உண்மையான முக்கியத்துவம் என்பது, அதில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், உற்பத்தியை விரிவுபடுத்தவும், தரமான முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்பதில் தான் அடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் இரண்டு வரவு - செலவுத் திட்டங்களும் நாட்டின் கடுமையான பொருளாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதிலும், மிகவும் அவசியமான பேரளவிலான பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியுள்ளன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
முறையான கட்டமைப்பு மாற்றம்
தற்போது அந்தப் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கிய உறுதியான முன்னேற்றத்தை நாடு எட்டியுள்ள நிலையில், அரசு அடுத்த கட்டமாகப் பொருளாதார விரிவாக்கம் மற்றும் முறையான கட்டமைப்பு மாற்றங்களை நோக்கித் தீவிரமாக நகர முற்பட்டு வருகின்றது என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.