யாழில் பட்டத்துடன் இணைந்து பறந்தவரின் திகில் அனுபவம்! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் பட்டமொன்றின் கயிற்றில் சிக்கிய இளைஞன், பறந்த சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் இது தொடர்பான காணொளி செய்தி என்பன முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
மிக உயரத்திற்கு பறந்த இளைஞன், நீண்ட நேரத்திற்கு பின்னர் கீழ் நோக்கி வந்துள்ளார். அதையடுத்து, கயிற்றை கைவிட்ட இளைஞன், கீழே வீழ்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த நடராசா மனோகரன் என்ற 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு பட்டம் விடும்போது கயிற்றில் தொங்கியுள்ளார். சுமார் 12 நிமிடங்கள் 120 அடி உயரத்தில் அவர் கயிற்றைப் பிடித்தவாறு தொங்கியுள்ளார். நண்பர்களின் உதவியினால் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது அனுபவத்தை பகிரந்து கொள்கையில்,
பட்டம் விடும்போது நான் தான் முன்னால் நின்றேன், எனக்கு பின்னால் இருந்தவர்கள் கையை விட்டது எனக்குத் தெரியாது, இரண்டு முறை இப்படி கயிற்றுடன் மேலே இழுத்தது, எனினும் நான் கையை விடவில்லை, மூன்றாவது முறை கயிற்றுடன் மேலே இழுத்துச் சென்று விட்டது. கிட்டத்தட்ட 120 அடிக்கும் மேல் கயிற்றை பிடித்த வண்ணம் மேலே சென்றுவிட்டிருந்தேன்.
என்னைக் காப்பாற்றுமாறு கூறி நான் கத்தினேன், நான் உயிரிழந்துவிட்டேன் என முதலில் எண்ணினேன், இதிலிருந்து தப்பிக்க மாட்டேன் என எண்ணினேன், கீழே பார்த்திருந்தால் நிச்சயமாக நான் விழுந்திருப்பேன்.
என் உடன் இருந்தவர்கள் கயிற்றைப் கீழே இறக்கி ஒரு இருபது அல்லது முப்பது அடி இருக்கும் வரை கொண்டு வந்தார்கள், பின்னர் நான் கையை விட்டுவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. பிறகு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.



