ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது - மார்க் கார்னி தெரிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை இணைத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கனடாப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாகப் பலமானவை, ஆனால் இரண்டும் ஒன்றாக இணையும் போது மேலும் பலமடைகின்றன" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கனடாவை இணை உறுப்பினராகச் சேர்ப்பதற்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டேர் லேயனின் இந்த முன்மொழிவை அமெரிக்கக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும்
இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எதிரான பகையான செயலாகக் கருதப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மிகக் கடுமையான வரிகளை விதிக்க நேரிடும் அல்லது சில வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழு, இந்த முன்மொழிவு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், இரு தரப்பினரின் பொதுவான பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே முன்வைக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
முக்கிய கனிமங்கள், பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றக் கனடா எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.