பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருளுடன் கைது
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.