தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு : எதிர்ப்பு வெளியிட்டுள்ள முதலாளிமார் சம்மேளனம்
தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் வெளியிடப்பட்டுள்ள கூட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமற்ற சம்பள உயர்வு
மேலும் அறிக்கையில்,“இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானம் நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும்.
இந்நிலையில், முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது. மேலும், இலங்கை முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது
அரசு எடுத்துள்ள இந்த முடிவால் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருப்பதுடன் தற்போது மதிப்பிடப்பட்டுள்ள ஒரு கிலோ தேயிலைக்கான செலவு சுமார் 45 வீதத்தால் அதிகரிக்கும்.
இதன் காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதுடன் அத்துறைகளில் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |