மன்னாரில் எரிபொருள் விநியோகம் குறித்து இடம்பெற்ற அவசர கலந்துரையாடல் (Photos)
தடைகள் இன்றி அரச மற்றும் தனியார் துறையினருக்கு எரிபொருட்களை சீரான முறையில் விநியோகிப்பது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலானது மன்னார் மாவட்டத்தில் இன்று(4) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அரச, தனியார் போக்குவரத்து சங்கம், மீனவ அமைப்புகள், வெதுப்பக உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர்கள், மன்னார் மின்சார சபை அத்தியட்சகர், மன்னார் வைத்தியசாலை தரப்பு பிரதேச செயலாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின் தடங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்களை சீரான வகையில் சகல தரப்பினருக்கும் உரிய முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள உள்ள கடற்தொழிலாளர்களுக்கு கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மீன்பிடி படகு மற்றும் றோலர் படகுகளுக்கு தேவையாக மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை உரிய முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஊடாக மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கும் உரிய முறையில் எரி பொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை மாவட்டத்தில் திடீரென மின் தடைகள் ஏற்படுகின்ற போது உடனடியாக அவசர தேவைகளுக்கு எரிபொருளை வழங்கவும், குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைக்கு தேவையான எரிபொருளை சிரமங்கள் இன்றி பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் அரச தனியார் பேருந்துகளுக்கு உரிய வகையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும்
இன்றி உரிய முறையில் எரிபொருளை வழங்க அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க
வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








