திருமலை எண்ணெய் தாங்கி உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எல்லே குணவங்ச தேரர்
திருகோணமலையில் உள்ள எரிபொருளை களஞ்சியப்படுத்தும் எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளதாக எல்லே குணவங்ச தேரர் (Elle Gunawansa Thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமக்கு கிடைத்து்ளள தகவல்களின் அடிப்படையில் உடன்படிக்கை தொடர்பான விடயத்தில் சிக்கலான நிலைமை இருக்கின்றது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்கனவே சில குழுக்களை தயார் செய்துள்ளோம் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட யுகதனவி (Yugadanavi) மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு விற்பனை தொடர்பான உடன்படிக்கைக்கு எதிராகவும் எல்லே குணவங்ச தேரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கி தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, ட்றிங்கோ பெட்ரோலியம் டே(ர்)மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்திருந்தார்.
இலங்கை - இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (LankaIOC) இணைந்து இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திய நிறுவனம் 49 வீத பங்குகளையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 51 பங்குகளையும் இந்த நிறுவனத்தில் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
எண்ணெய் களஞ்சிய தொகுதியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் இந்த நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகளுக்காக இந்திய நிறுவனத்துடன் இதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடப்படவுள்ளது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
