மின்சார வாகன இறக்குமதி: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யும் வசதியை தொடர்வது தொடர்பில், இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் வாகனங்களை குறைத்து மதிப்பிடுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக திறைசேரி தரப்புக்கள் தெரிவித்த்துள்ளன.
முதற்கட்ட சுங்க அறிக்கைகளின்படி, இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 119 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 75 வாகனங்கள் ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
புலனாய்வாளர்களின் ஆய்வு விடயம்
இந்தநிலையில் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள், விடுவிக்கப்பட வேண்டிய வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள் என்பன தொடர்பில், விசாரணைகள் இடம்பெறும் என சுங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பணம், மதிப்பீடு மற்றும் வாகனங்கள் விற்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கி வழிகள் மூலம் நாட்டிற்கு நேரடியாக வெளிநாட்டுப் பணம் அனுப்பும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.