எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சஜித் அறைகூவல்
இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால், அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக் கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(14.9.2026) நடைபெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியக் கூட்ட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளாகும்.
அனர்த்த அபாயங்கள்
பேதங்களின்றி, வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடல் திட்டமொன்றை இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியம் முன்னின்று ஆரம்பிக்கும். மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும், வன வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு இன்றியமையாதது.

அனர்த்தங்கள் ஏற்படும்போது நாட்டின் முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான சேவையாற்றும் போதிலும், உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன் முன்கூட்டியே பதிலளிக்கும் முறையும், துரிதமான வெளியேற்றத் திட்டமும் அவசியமாகும்.
அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் வழமை மாறி, மனிதர்கள், காடுகள், குடிதண்ணீர், நீர்ப்பாசனம், உணவு மற்றும் வலுச்சக்திப் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்கூட்டியே எதிர்கொள்ளும் முறையான எதிர்வினைத் திட்டம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை