தமிழர் தேசத்துக்கென வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை வேண்டும்: உருத்திரகுமாரன் கோரிக்கை
ஈழத் தமிழர் தேசத்துக்கென நன்கு வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் செய்தியினை வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு 14 வருடங்களுக்கும் மேலான காலம் கழிந்துள்ள தற்போதைய காலகட்டத்தில், உலக அரசியல் ஒழுங்கில் ஏற்றட்டு வரும் மாற்றங்கள் நமது மாவீரர் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பான சந்தர்ப்பங்களைத் தரவல்லது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அரசியல், இராஐதந்திர வழிமுறை
தற்போதய காலகட்டத்தில் உலக அரசியலின் ஒழுங்கு ஒற்றை மையத்தில் இருந்து பன்மையத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்தும் உருவாகி வரும் பன்மைய அரசியல் ஒழுங்கு சாதகமான வாய்ப்புகளைத் தரக்கூடியது.
தோற்றம் பெற்று வரும் இந்த புதிய உலகச் சூழலை நாம் சாதகமாகப் பயன்படுத்த வேண்டுமாயின் அதற்கேற்ப எமது போராட்ட நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
நாம் தற்போதய காலகட்டத்திக்கு ஏற்ப எமது போராட்டத்தை அரசியல், இராஐதந்திர வழிமுறையில் நடாத்தி வருகிறோம்.
மாறிவரும் உலகச் சூழலைச் சரிவரப் பயன்படுத்த ஈழத் தமிழர் தேசத்தை இலங்கைத்தீவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தரப்பாக நாம் மாற்ற வேண்டும்.
இவ்வாறு மாற்றம் காண்பதற்கு இலட்சியத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை ஈழத் தமிழர் தேசத்துக்கு உருவாகுவது தேவையானதாக அமையும்.
ஜனநாயகரீதியில் பொதுவாக்கெடுப்பு
தாயகத்தையும் புலம்பெயர் மக்களையும் இணைத்து ஓர் அரசியல் உயர் பீடமொன்றை அமைக்கும் வாய்ப்புக்கள் குறித்து கவனம் கொள்ளுமாறு இன்றைய மாவீரர் நாளில் அழைப்பு விடுக்கிறேன்.
மேலும், ஈழத் தமிழர் தேசத்தை ஒரு வலுமையமாக மாற்றுவதாயின் உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணிச் செயற்பட வேண்டும். இதற்கு, ஈழத் தமிழர் தேசத்துக்கென நன்கு வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை வேண்டும்.
மேலும் தனது அறிக்கையில், தமிழீழ மக்களின் அரசியற் பெருவிருப்பாக மாவீரர்களின் கனவான இறைமையும், சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
இதனை மறுதலிப்பவர்கள் எவருக்கும் இவ் விடயம் குறித்து ஜனநாயகரீதியில் பொதுவாக்கெடுப்போன்றை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டால் உண்மை வெளிப்படும் என்பதனை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
இவ் அரசியல் இலக்கை தொலைநோக்காக் கொண்ட நமது மக்கள் சட்டக்காரணங்களுக்காக ஈழத் தாயகத்தில் சமஷ்டி வடிவத்தில் தங்கள் அரசியல் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இது தமிழீழத் தனிநாட்டுக்கான கோரிக்கையாக வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |