மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய 6 பேர் கைது : தொடரும் பொலிஸாரின் நடவடிக்கை (Video)
புதிய இணைப்பு
மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (27.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் கைது எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நினைவேந்தல் நிகழ்விற்காக ஈகைச் சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திடீரென உள் நுழைந்த பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகளை அகற்றியுள்ளனர்.
நினைவேந்தல் நடாத்துவதற்கு தடை
இதனை கண்டித்து அங்கு சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈகை சுடரேற்றுவதற்கு 5 நிமிடமாவது தாருங்கள் என கெஞ்சிக்கேட்டும் நேரம் வழங்காமல் திடீர் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமை போன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவு கூறும் முகமாகவும் ஈகைச் சுடரேற்றி நினைவேந்தலை மேற்கொள்ளும் முகமாக குறித்த நேரமான மாலை 6.05 நிமிடம் வரை காத்திருந்தனர்.
இதன்போது கலகம் அடக்கும் பொலிஸாருடன் உள் நுழைந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் நினைவேந்தல் நடாத்துவதற்கு தடை ஏற்படுத்தியதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட சிகப்பு, மஞ்சள் நிற கொடிகளை அகற்றியுள்ளனர்.
அத்துடன்துடன் ஒலி பெருக்கி சாதனங்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த பொலிஸாரின் செயற்பாடு இடம்பெறும் போது மாவீரர்களின் உறவுகள் ஈகைச் சுடரை அச்சத்துடன் விரைவாக ஏற்றிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இச் சம்பவமானது பிரதேசத்தில் அசாதாரன சூழ் நிலையை ஏற்படுத்தியதுடன் மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தில் அதிகளவு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் இராணுவ கவச வாகனங்கள், கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்பன முன்னெச்சரிக்கையாக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
செய்தி- சசிகரன்
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய நால்வரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (27.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் அவரது மனைவியான மகளீரர் அமைப்பாளர், அவரது மகன் மற்றும் கொடிகளை வாகனத்தில் எடுத்துச் சென்றவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிப்பதற்கா மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் அந்த பகுதியில் நடமாடும் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மற்றும் கம்பிகள் இருப்பதை கண்டு வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video)
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மனைவியான மகளீர் அமைப்பாளர், மகன் ஆகியோர் பொலிஸ் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட சாரதியை பார்த்துவிட்டு 6 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றயதையடுத்து பின்னர் அவர்கள் 3 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |