பொருளாதார நெருக்கடியால் மலையகத்தில் மந்த போசன நிலை அதிகரிக்கும்! சச்சிதாநந்தன் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக மலையகத்திலுள்ளவர்கள் மந்த போசன நிலையினையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவர் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக ஊடகத்திற்கு நேற்று(03.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மலையகம் என்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாகும். அதிலும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தான் அதிகமான மந்த போசன நிலை காணப்படுவதாக கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.
இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி
இன்று நாட்டில் அத்தியவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களினதும் விலைகள் என்றுமில்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அதிகரிக்கப்பட்ட தொகையை விட இன்று பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது உலக நிலைமை என்று கருதுகின்ற போதிலும் நுவரெலியா மாவட்டத்தினை பொருத்த வரையில் பாரிய பின்னடைவினை சகல துறைகளிலும் இது ஏற்படுத்தும் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமின்றி பிறக்கும் நிலையும் ஏற்படும்.
அது மாத்திரமன்றி குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகள் என்றுமில்லாத அளவு உயர்வடையும் ஜனாதிபதி இன்று நாட்டினை சரியான பாதையில் இட்டுச்சென்று கொண்டிருக்கிறார் என்றே நினைக்கின்றேன்.
ஆகவே இந்த மக்களது பிரச்சினைகள் தொடர்பாக சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு கடந்த காலங்களில் பொருட்களின் விலைகள் சிறிய அளவில் உயர்வடைந்தாலும் பலர் சுலோக அட்டைகளை ஏந்திக்கொண்டும் பந்தங்களை ஏந்திக்கொண்டும் போராட்டம் செய்தார்கள் ஆனால் இன்று அவர்களை காணவில்லை.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சியை காணவில்லை
அவர்களை கண்டால் வரசொல்லுங்கள் என்று கூறுவதோடு அவர்களை கையோடு கூட்டி வாருங்கள் என்றும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஒரு நாட்டில் அரசினை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு எதிர்கட்சி தான் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தினை எடுக்கும் ஆனால் இன்று இலங்கையின் எதிர்கட்சியின் நிலை இருக்கிறாதா என்று கேட்கும் அளவிற்கே அவர்களின் செயப்பாடுகள் அமைந்துள்ளன.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூடிய அக்கறை காட்டுவதாக தெரியவில்லை ஆனால் இந்த அரசாங்கத்தினை நம்பி இன்றும் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளதுடன் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நம்பிக்கையில் தெரிவு செய்து கொடுத்துள்ளனர்.
எனவே, மக்களின் பிரச்சினைகளை இதனை விட மிகவும் பொருப்புடன் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.