எபோலா பரவலை எதிர்கொள்வதில் பெரும் சவால் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் தற்போதைய எபோலா பரவலில் 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், நோய்த்தொற்றைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதனை எதிர்கொள்வதில் சுகாதாரப் பிரிவினர் தற்போது பெரும் சவால் எதிர்கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாம் அவசரமாக எமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறோம், ஆனால் தற்போது இந்தத் தொற்றுநோய் எங்களை விட வேகமாகப் பரவி வருகிறது" என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.
வைரஸ் நோய்
அத்துடன், கொங்கோ ஜனநாயகக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் உகாண்டாவில் மேலும் இரண்டு எபோலா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
அத்துடன், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்காணிப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 900 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எபோலா என்பது உடலின் திரவங்களுடனான நேரடித் தொடர்பின் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இது கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த புதிய பரவலின் மையப்பகுதியாக கொங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்தூரி அமைந்துள்ளது.
இது அதன் ஆரம்பப் புள்ளியிலிருந்து 200 கிலோமீட்டர் (125 மைல்கள்) தொலைவில் உள்ள அண்டை மாகாணங்களுக்கும், நாட்டின் எல்லைகளைத் தாண்டி உகாண்டாவிற்கும் பரவியுள்ளது.
புதிதாகப் பரவி வரும் 'புந்திபுகியோ' வகை எபோலா வைரஸிக்கு தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு இந்த அரிய வகை புந்திபுகியோ எபோலா பரவலை சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததை அடுத்து, கொங்கோ மற்றும் உகாண்டாவின் நகரங்களில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எபோலா தொற்று
இதற்கிடையில் கொங்கோவின் கிழக்குப் பகுதியில் எபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்த ஆத்திரமடைந்த இளைஞர்கள் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளை அவசரமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொங்ப்வாலு பொது மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.
எனினும், உயிரிழந்த தங்களது உறவினர்கள் இருவரின் உடல்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மருத்துவமனையின் மருத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இத்தூரி மாகாணத்தில் உள்ள மொங்ப்வாலு பகுதியில் வசிக்கும் மக்கள் குழுவினர், எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினால் சந்தேகத்திற்குரிய மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரத்திற்குத் தீ வைத்தனர்.
இந்தத் தாக்குதலின் போது, எபோலா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 18 பேர் அந்த மையத்திலிருந்து வெளியேறியதுடன், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கண்டறியப்படவில்லை.