ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த கும்பல் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் வீட்டிற்கு சென்ற 5 பேர் கொண்ட குழுவொன்று தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (25.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிராக நேற்று (25) பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பழைய மாணவர் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர்.
ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
இந்த நிலையில், பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, சம்பவம் நடைபெற்ற தினத்தில் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தொடர்புகொண்டு, போராட்டம் குறித்து ஊடக அறிக்கை வெளியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், குறித்த அழைப்பை ஊடகவியலாளர் நிராகரித்துள்ளார்.

இதையடுத்து, “வரவில்லை என்றால் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்போம்” என அங்கிருந்தவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் பிள்ளையான் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.