பௌத்த சாசனத்திற்கு இருண்ட காலம்: ஒன்றிணையுமாறு அஸ்கிரி தரப்பு அழைப்பு!
பௌத்த சாசனத்திற்கு தற்போது ஒரு இருண்ட காலம் உருவாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பௌத்த சமூகத்தின் நான்கு பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அஸ்கிரி தரப்பின் அநுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, வெலிகெபொல பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொம்புல்வல ரஜமஹா விகாரையின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பௌத்த சாசனத்தின் பாதுகாப்புக்காக மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, துட்டகெமுனு மன்னர் தனது ஒட்டுமொத்த முயற்சியும் பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக மட்டுமே எனவும் ஆனால், இன்று அதுபோன்றதொரு பிரகடனத்தைச் செய்தால், அது பல்வேறு கோணங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசன அமைச்சில் சுமார் 40,000 பௌத்த துறவிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏதோ சில சட்டவிரோத செயல்களுக்காக சிறையில் இருப்பவர்கள் 30 பேர் போன்ற மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்களே ஆவர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைய சூழலில், அந்த சிறுபான்மையினரின் தவறான செயல்பாடுகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த பௌத்த துறவிகள் சமூகத்தையுமே மிக மோசமாக அவமதிக்கும் மற்றும் விமர்சிக்கும் ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது என வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இந்த அவதூறுப் பரப்புரைகளுக்குப் பின்னால் சாசனத்திற்கு எதிரான ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாகவும், இது பௌத்த சாசனத்திற்கு ஒரு இருண்ட காலம் பிறந்துள்ளதற்கான அறிகுறி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு