சீன காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து.. 28 பேர் பலி
சீனாவின் புஜியான் மாகாணம் ஜின்ஜியாங் நகரில் உள்ள 'ஹுய்தெங்' காலணி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு நடைபெற்று வந்த தீவிர மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பாதுகாப்பு விதிமுறைகளை மிகக் கொடூரமாக மீறிய குற்றத்திற்காகத் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் முக்கிய முகாமையாளர்கள் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தீ விபத்து
மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக உறுதி செய்யும் நோக்கில், அந்த நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் சீன அரசு உடனடியாக முடக்கியுள்ளது.
ஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்தத் தொழிற்சாலையின் தரைத்தளத்தில் இருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ, அங்கிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய இறப்பர் மற்றும் பசை போன்ற காலணி தயாரிப்புப் பொருட்களால் மிக அதிவேகமாகப் பரவியமை வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, தொழிற்சாலையின் படிக்கட்டுகள் மற்றும் அவசரக் கால வழித்தடங்களில் காலணி தயாரிப்பதற்கான கழிவுகளும், சோல்களும் பெரிய அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்ததே தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் போனதற்கும், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் விளையாட்டு காலணிகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜின்ஜியாங் நகரில்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், விபத்துக்கான பின்னணியை முழுமையாக ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது இரக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.