கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (02.11.2023) கிழக்கு பல்கலைக்கழக அரசடி வளாகத்தின் முன்னாள் இடம்பெற்றுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து ஆர்பாட்டத்தற்கு அழைப்பு விடுத்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பளப் பிரச்சினை
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 107 வீத அதிகரிப்பை எத்தனைகாலம் ஏமாற்றுவாய், பொருளாதார பிரச்சினையை தீர்க்க உமக்கு வழியில்லையா, புத்திசாலிகளை உருவாக்க ஒதுக்குவதற்கும் காசில்லையோ, கல்விமான்களை உருவாக்க அக்கறையில்லை அரசாங்கத்திற்கு, ஓய்வூதியத்தை சீராக்கு ஊழியர்களை சமமாக நடத்து, ஒரே நாட்டு சட்டத்தில் வேண்டாமே பிரிவினைகள், விற்காதே கல்வியினை - அழிக்காதே ஏழைகளின் கனவுகளை, வேண்டாமே தனியார் மயமாக்கம் அரச பல்கலைக்கழகத்தை பாதுகாப்போம்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வும் இல்லை வெற்றிடங்களை நிரப்பவும் இல்லை, கல்விக்கூட பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு கணக்கும் இல்லை, பல்கலைக்கழக பதவிகளில் அதிகரித்த வெற்றிடங்கள், நாளடைவில் அதிகரித்து வானுயர்ந்து போகிறது, வேலைநேரத்தை அதிகரித்து ஊழியர்களை நசுக்க வேண்டாம்.
தொழிலாளர் உரிமைகளில் கைவைக்கும் அரசாங்கம், புதிது புதிதாய் சட்டம் இயற்றி என்ன செய்யப் போகிறதோ, என சுலோகங்கள் எந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.