கடந்த கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்களுடன் இணைந்து ஆட்சி செய்தேன்: பிள்ளையான்
நான் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல. 2008 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்த காலம் முஸ்லிம்களோடு இணைந்தே ஆட்சியை அமைத்திருந்தேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
சனல் 4 காணொளி தொடர்பில் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பத்தினருடனான அரசியல்
முஸ்லிம்களுக்கு எதிரானவன் பிள்ளையான் என யார் கூறினாலும் நான் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் முஸ்லிம் மக்களின் அபிவிருத்திக்காக பல சேவைகளை செய்திருக்கின்றேன். இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுவேன்.
ஆகவே பிள்ளையான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்ற விமர்சனங்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.
ராஜபக்ச குடும்பத்தினருடன் அரசியல் ரீதியிலான உறவு காணப்படும் நிலையில் அவர்களே என்னை சிறையிலிருந்து விடுவித்ததாக கூறப்படும் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்துக்கள் நீதிமன்றத்தினை அவமானப்படுத்தும் செயலாகவே கருதுகின்றேன்.
மேலும்,ராஜபக்ச குடும்பத்தினரையும்,இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என்றும் கூறியுள்ளார்.