தொடரும் வைத்தியர்களின் போராட்டம்: கிழக்கு மாகாண நோயாளிகள் கடும் அவதி
சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
கிண்ணியா தள வைத்தியசாலையிலும் இன்று(23.01.2026) காலை முதல் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
48 மணிநேர போராட்டம்
இதன் காரணமாக வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், உயிராபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் எந்தவித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மந்தகதியிலான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பிராந்திய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று(22) நண்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்திருந்தது.
இதனால் இன்று வழமை போல் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வருகை தந்த நோயாளிகள், நாடு தழுவிய ரீதியிலான புதிய போராட்ட அறிவிப்பால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தூர இடங்களில் இருந்து அதிகாலை வேளையிலேயே வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டு கவலையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் அவதி
இதன்போது நோயாளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். ஒருமுறை வந்து செல்ல போக்குவரத்துக்காக மட்டும் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. நாங்கள் ஏழைகள்.
இந்த நாட்டில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி இல்லையா? எமது நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களால் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என அவருடைய நிலையை எடுத்துரைத்துள்ளார்.


உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam