மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்
மொராக்கோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1037ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 1200 பேர் காயமடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
மொராக்கோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை மொராக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான பின் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள போதும் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என மொராக்கோ நில அதிர்வு கண்காணிப்பு சேவையின் தலைவர் கூறியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை மிகுந்த வேதனையளிப்பதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
Extremely pained by the loss of lives due to an earthquake in Morocco. In this tragic hour, my thoughts are with the people of Morocco. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest. India is ready to offer all possible assistance to…
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
முதலாம் இணைப்பு
மத்திய மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 296 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |